ஓம் சரவண பவ! வருக! வருக!! கூந்தலூர் முருகன் கோவில் கும்பகோணத்திலிருந்து 20 கி.மீ தூரத்தில் நாட்சியார்கோவில், எரவாஞ்சேரி, பூந்தோட்டம் வழித்தடத்தில் அமைந்துள்ளது. கூந்தலூர் முருகன் கோவில் சனி - செவ்வாய் - பரிகார ஸ்தலம்!. ஓம் சரவண பவ!.

உரோமரிஷி சித்தர்


உரோமரிஷி சித்தர் 


1600 ஆண்டுகள் பழமைமிக்கசிவத்தலம், திருநாவுக்கரசரால் தேவாரப்பாடல் பெற்றதும் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்றதும்   திருமுருகப்பெருமான் தேவமயிலுடன் ஈசான்ய பாகத்தில் சனிபகவானுக்கு எதிரே எழுந்தருளி அருள் பாலிக்கும் திருக்கூந்தலூர் அன்னை ஆனந்தவல்லி உடனுறை அருள்மிகு ஜம்புகாரணேசுவரர் சுவாமி திருக்கோவிலில் , அய்யன் சிவனை தொழுது அவனடி சேர்ந்த சினருட்சித்தர் தான் உரோமரிஷி சித்தர்.


உடல் முழுவதும் உரோமம் முளைத்திருந்தமையால் உரோம முனி எனக்காரணப் பெயரைப்பெற்றாலும் , சீனத்திலிருந்து வந்து தமிழகத்தில் சித்தியடையப்பெற்ற காலங்கிநாதர், போகர் சித்தர் போல் இவரும்   உரோமாபுரியிலிருந்து தமிழகம் வந்து சிவனருள் பெற்று அஷ்டமா சித்தி பெற்ற பதினெண் சித்தரில் ஒருவராய் விளங்கி அடியார்க்கு அற்புதங்கள் பல செய்த ஞான வள்ளல் தான் உரோமரிஷி சித்தர்.

" கால வட்டம் தங்கி மதி அமுதப் பாலைக் 
கண்டு பசியாற்றி மண் சுவடு நீக்கி 
ஞால வட்டம் சித்தடும் பெரியோர் பதம் 
நம்பினதால் உரோமன் என்பேர் நாயன் தானே"
                                                                                                                ( உரோமரிஷி ஞானம் )

சிவனருட்சித்தரான உரோமரிஷி சித்தர் இயற்றிய அரிய மருத்துவ நூலை, பொறாமை எண்ணம் கொண்ட காரணத்தால் சட்டைமுனி சித்தர் கிழிக்க முனைந்த நிலையில் ,அந்நூலை இவரது குருநாதரான குறு புசுண்டர் தனது சடாமுடியில் ஒளித்துவைத்து அகத்திய முனிவரிடம் கொடுக்க, அகத்திய மாமுனி அந்த அரிய வைத்திய நூலை நெடுநாள் பாதுகாத்து வைத்திருந்து மீண்டும் உரோமரிஷியிடம் ஒப்படைத்தார்.


தேவருலக கணக்கின்படி , ஒரு பிரம்மா உயிர்துறந்தால் இவருடைய உரோமம் ஓன்று உதிரும்.இவ்வாறு மூனரை க்கோடி பிரம்மாக்கள் உயிர்துறந்தால் மட்டுமே, இவரது உலக வாழ்வு முடிவுறும்.


மேலும் உரோமமுனி சித்தர் ஜீவசமாதி அடையும் காலத்தில் , அஷ்ட கோண முனிவருக்கு ஒரு கோணம் நிமிரும் என்ற வரலாற்றுச்செய்தியும் உண்டு.

உரோமரிஷி சித்தர் , திருக்கூந்தலூர் அரசலாற்றின் தென்கரையில் தவம் செய்து வரும் வேளையில் நாடிய அடியார்க்கெல்லாம் வறுமை நீங்கி நல்வாழ்வு பெறவும்   , செம்மையான சிவனருட்செல்வராக அடியாரெல்லாம் சிவத்தொண்டு ஆற்றி பிறவிப்பயனை செவ்வனே அடையவும் தமது அஷ்டமா சித்தியால் தாடி வழியே  பொன் வரவழைத்து அவர்க்கெல்லாம் அளித்து வந்தார்.

ஒரு சமயம், சிவனாரின் திருவிளையாடல் காரணமாக , அவரின் தாடி வழியே பொன்னை வரவைக்கும் அவரின் சித்தி பலிதமாகவில்லை.

உரோமரிஷி சித்தர் உடனே , தனது தாடியை நீக்கிவிட்டு , நீராட மறந்து ஈசனை வழிபட திருக்கூந்தலூர் ஆலயம் சென்றடைந்தார்.

நீராடாமல் , சிவனை தரிசிக்க ஆலயம் புகத்துணிந்த , சிவ சித்தரான உரோமரிஷி சித்தரை, ஆலய வாயிலில் முக்கண் முதல்வன் விநாயகனும் சுந்தர வேலவன் முருகனும் தடுத்தனர்.

உரோமரிஷி சித்தரும் மனம் வருந்தி ஆலய கோபுர வாயிலிலேயே தியானித்திருக்க, சிவனின் திருவிளையாடல் இனிதே நிறைவேறியது. அடியார்  தம்  புறத்தூய்மையை விட அவர்தம் அகத்தூய்மையே இன்றியமையாதது எனும் நற்கருத்தை உலகம் அறியும்வண்ணம் உணர்த்த இறைவன் அருளிய காட்சியே அது எனும்விதமாய் ஈசன் வாடி நின்ற உரோமரிஷிசித்தருக்கு தமது தரிசனத்தை ஆலயத்திற்கு வெளியே காட்டியருளிய நிகழ்வு இன்றும் நமக்கு காணக்கிடைக்கிறது.

ஆலய வாயிலில் இடப்பக்கம் கரங்கள் கூப்பிய நிலையில் உரோமரிஷி சித்தரின் திருமேனியும் இறைவன் ஈசனின் இலிங்கத்திருமேனியும் நமக்கு அந்த அற்புத நிகழ்வை மனதில் பதிய வைக்கிறது.


உரோமரிஷி சித்தர் ஆருடம், சோதிடம்,வைத்தியம்,முப்பூ ஞானம் போன்ற அரிய சாஸ்திரங்களில் நாகாரூடம்,வகார சூத்திரம்,சிங்கி வைப்பு, உரோமரிஷி வைத்திய சூத்திரம்,அமுத கலை ஞானம்,உரோமரிஷி முப்பூ சூத்திரம் மற்றும் உரோமரிஷி சோதிட விளக்கம் போன்ற மானிடர் யாவருக்கும் பலன்களையும் தீர்வையும் காட்டும் அற்புதப் படைப்புகளை உலகிற்கு அளித்திருக்கிறார்.



இத்தகைய அற்புதங்கள் செய்த உரோமரிஷி சித்தர் சந்திர கிரகத்தை பிரதிபலிப்பவர், ஜாதகத்தில் உள்ள சந்திர கிரக தோசங்களை நீக்கி மனமது செம்மையடைய வைப்பவர், மனோபலம் பெருக வைத்து செயல்களில் தெளிவு, முடிவுகளில் சஞ்சலம் நீக்கி, படிப்பு ,தொழில் சிறக்கச்செய்பவர்,தாயார்,குழந்தைகள் வழியில் ஏற்படும் இன்னல்கள் களைபவர்.

உரோமரிஷி சித்தர் சரும, கேச பாதிப்புகளை களைபவர், இவருக்கு மூலிகைகளால் ஆன எண்ணெய்க்காப்பிட்டு அந்த எண்ணெயை சரும பாதிப்புள்ள இடங்களில் , கேசத்திற்கு தேய்த்துவர, பாதிப்புள்ள இடங்களில் சருமம் , கேசம் சீராகும். 



 உரோமரிஷி சித்தர் வழிபாடு மற்றும் சிறப்பு பூசைகள் விவரம் அறிய எம்மை முகப்புப்பக்கத்தில் உள்ள "தொடர்பு" படிவம் மூலம் தொடர்பு கொள்ளலாம், அல்லது எமது மொபைலிலும் தொடர்பு கொள்ளலாம்.

இணையதளம்              :    http://www.koonthalurmurugantemple.org

ப்ளாக் தளம்                   :   http://koonthalurmurugantemple.blogspot.in
                                 http://romarishi.blogspot.in/

 மின்னஞ்சல் முகவரி:   romarishitemple@gmail.com
                                 koonthalurmurugantemple@gmail.com


மொபைல் எண்             :  9443524737 / 9688677538

* * ஆலய வழித்தடம்: 


கும்பகோணம் நாச்சியார்கோவில் வழியாக பூந்தோட்டம் செல்லும் சாலையில் நாச்சியார்கோவிலில் இருந்து 10 கி.மீ தொலைவில் கூந்தலூர் அமைந்துள்ளது. 

[ கூந்தலூர் முருகன் ஆலயம் என்றால் அனைவரும் அறிவர் ]


ஓம் ஸ்ரீ உரோமரிஷி முனி சித்தர் ஸ்வாமியே போற்றி! போற்றி!!