ஓம் சரவண பவ! வருக! வருக!! கூந்தலூர் முருகன் கோவில் கும்பகோணத்திலிருந்து 20 கி.மீ தூரத்தில் நாட்சியார்கோவில், எரவாஞ்சேரி, பூந்தோட்டம் வழித்தடத்தில் அமைந்துள்ளது. கூந்தலூர் முருகன் கோவில் சனி - செவ்வாய் - பரிகார ஸ்தலம்!. ஓம் சரவண பவ!.

முருகன் ஆலயம்

                      


                     தரையினில் வெகுவழி சார்ந்த மூடனை
                     வெறியனை நிறைபொறை வேண்டி டாமத
                     சடலனை மகிமைகள் தாழ்ந்த வீணணை ...... மிகுகேள்வி

                     தவநெறி தனைவிடு தாண்டு காலியை
                     யவமதி யதனில்பொ லாங்கு தீமைசெய்
                     சமடனை வலியஅ சாங்க மாகிய ...... தமியேனை

                     விரைசெறி குழலியர் வீம்பு நாரியர்
                     மதிமுக வனிதையர் வாஞ்சை மோகியர்
                     விழிவலை மகளிரொ டாங்கு கூடிய ...... வினையேனை

                     வெகுமல ரதுகொடு வேண்டி யாகிலு
                     மொருமல ரிலைகொடு மோர்ந்து யானுனை
                     விதமுறு பரிவொடு வீழ்ந்து தாடொழ ...... அருள்வாயே

                     ஒருபது சிரமிசை போந்த ராவண
                     னிருபது புயமுட னேந்து மேதியு
                     மொருகணை தனிலற வாங்கு மாயவன் ...... மருகோனே

                     உனதடி யவர்புக ழாய்ந்த நூலின
                     ரமரர்கள் முனிவர்க ளீந்த பாலகர்
                     உயர்கதி பெறஅரு ளோங்கு மாமயி ...... லுறைவோனே

                     குரைகழல் பணிவொடு கூம்பி டார்பொரு
                     களமிசை யறமது தீர்ந்த சூரர்கள்
                     குலமுழு தனைவரு மாய்ந்து தூளெழ ...... முனிவோனே

                      கொடுவிட மதுதனை வாங்கி யேதிரு
                     மிடறினி லிருவென ஏந்து மீசுரர்
                     குருபர னெனவரு
கூந்த லூருறை ...... பெருமாளே.     
 - திருப்புகழ்.
                                                           *   *    *                                                                 



            1600 ஆண்டுகட்கு முற்பட்ட பழம்பெரும் சிவத்தலம் திருக்கூந்தலூர். அப்பரடிகள் எனும் திருநாவுக்கரசரும் , திருஞானசம்பந்தரும் கயிலாயநாதனை கண்டு வணங்கிய சிவத்தலங்களில் திருக்கூந்தலூரும் ஒன்று.

அருணகிரிநாதர் திருப்புகழில் இத்திருக்கோவில் முருகபெருமானை, 

                  " ஒருபது சிரமிசை போந்த ராவண
                     னிருபது புயமுட னேந்து மேதியு
                     மொருகணை தனிலற வாங்கு மாயவன் ...... மருகோனே
"

எனப்  போற்றிப்பாடியுள்ள இப்பாடலில் இராவணணை இராமன் வதம் செய்த குறிப்பும், முருகப் பெருமான் மயில் மேல் வீற்றிருந்து அருள்பாலிக்கும் கருணையும் சிறப்பாக வெளிப்பட்டுள்ளது.

இத்திருக்கோவில் , கூந்தலூர் முருகன் ஆலயம் என பக்தர்களால் அழைக்கப்படுகிறது. தமிழ்க்கடவுள்  அருள் தரும் ஆனந்த முருகன் இவ்வாலயத்தில் , நுழைவாயிலின் ஈசான்ய மூலையில் தேவமயிலுடன் தேவியருடன் நின்ற கோலத்தில் அருள்பாலிப்பதும், ஈசான்யப்பார்வையால் சனீச்வரரை நோக்கி இருப்பதும், எங்கும் காணவியலா பெருங்காட்சி! நானிருக்கிறேன், சனி பகவான் அளிக்கும் இடர் துன்பம் களைகிறேன் என பக்தர்களுக்கு அபயம் அளிப்பது போல இருக்கிறது, முருகப்பெருமானின் திருக்கோலம்!

திருக்கோவிலின் தெற்கே , குமார தீர்த்தம் குமரகுருபரன் எனும் முருகப்பெருமானால் உருவாக்கப்பட்டது.

ஈசான்ய பாகத்தில் முருகப்பெருமான் , ஈசான்யப்பார்வையால் சனீச்வரரை நோக்குவது , சனி செவ்வாய் கிரகப்பாதிப்புகளால் , அல்லல் பட்டு , என்று நம் துயரம் நீங்கும், யாதொரு உயிர்க்கும் கெடுதல் நினையாது வாழ்ந்தும் கிரகப்பாதிப்புகள் நம்மை கொடுமையாக வாட்டுகின்றனவே, என மனம் கலங்கி  வருந்தி வாழும் அன்பர் இத்திருக்கோவிலில் , ஈசான்யப்பார்வையால் சனி பகவானை சாந்தப்படுத்தும் சத்ரு சம்ஹாரமூர்த்தியான  முருகபெருமானின்  திருவடிகளில் பணிந்து சரணடைந்து, அவரவர் துயரம் விரைவில்  தீரும் எனும் நம்பிக்கையுடன் மன எழுச்சி பெற்று ,  நற்சிந்தனையுடன் முருகபெருமானை  வணங்கி நிற்பர்.

நாடி வரும் அடியார் துயர் துடைக்கும் தேவ மயிலோன் முருகபெருமான்  திருப்பதம் பணிய ,  துன்பங்கள் நீக்கி நல் வாழ்வு அருள்வார்!

முருகப்பெருமானுக்கு மாதந்தோறும் கிருத்திகை,ஷஷ்டி நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெருகிறது.

பங்குனி உத்திர உற்சவம் வருடந்தோறும் , பால் குடங்களுடன் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

திருக்கோவில் சுற்றிலும் பல வகை மரங்கள் பாங்குற வளர்க்கப்பட்டு வருகின்றன. மேலும் ஆலய உட்பிரகாரத்தில் நந்த வனம் உள்ளது.

திருக்கோவில் முன் அழகான கட்டுமானத்தில் ஒரு வசந்த மண்டபம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. திருக்கோவிலை சுற்றிலும பசுமையான தோட்டங்கள் , திருக்கோவில் உள்ளே இறைவனின் அருளாசி,ஆலய வெளியே இயற்கை அன்னையின் அற்புதக்காட்சி,அடியார் யாவரும் மன நிறைவுடன் திருக்கோவில் தரிசனம் செய்து  , மிக மன நிறைவுடன் இயற்கையை தரிசித்து வர ஒரு அருமையான தலம் தான் கூந்தலூர் முருகன் திருக்கோவில் என அழைக்கப்படும் அருள்மிகு ஜம்புகாரணேசுவரர் திருக்கோவில்.

1600 ஆண்டுகால பழமைமிக்க இந்த திருக்கோவில் கல்வெட்டுகளை , ஆராய்ந்து , தொல்லியல் ஆய்வாளர் திரு.குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் அளித்த ஆய்வுக்குறிப்புகள் மூலம்  முருகபெருமான்  திருமேனி 1600 ** ஆண்டுகால பழமைச்சிறப்பு பெற்றது என அறிய முடிகிறது.

பழம்பெருமை மிக்க தமிழ்க்கடவுள் அடியார்க்கு வளமே  தரும் அருட்சுடர் முருகபெருமான் தரிசனம் பெறுவோம்! அவனியில் நலமுடன் வாழ்வோம்!!

**ஆய்வுக்குறிப்புகள்  , முகப்புப்பக்கத்தில் இணைப்பில் உள்ளன.