ஓம் சரவண பவ! வருக! வருக!! கூந்தலூர் முருகன் கோவில் கும்பகோணத்திலிருந்து 20 கி.மீ தூரத்தில் நாட்சியார்கோவில், எரவாஞ்சேரி, பூந்தோட்டம் வழித்தடத்தில் அமைந்துள்ளது. கூந்தலூர் முருகன் கோவில் சனி - செவ்வாய் - பரிகார ஸ்தலம்!. ஓம் சரவண பவ!.

ஆலய வரலாறு





திண்டீச்சரங் சேய்ஞலூர் செம்பொன் பள்ளி 
தேவூர் சிரபுரஞசிற்றேமம் சேறை
கொண்டீச்சரங் கூந்தலூர் கூழையூர் கூடல் 
குருகாவூர் வெள்ளடை குமரி கொங்கு
அண்டர் தொழும் அதிரை வீரட்டானம் 
ஐயாறு சோகந்தி ஆமாத்தூருங்
கண்டியூர் வீரட்டங் கருகா வூருங்
                                            கயிலாய நாதனையே காணலாமே.       - அப்பர் - 6 - 70 - 9



1600 ஆண்டுகட்கு முற்பட்ட பழம்பெரும் சிவத்தலம் திருக்கூந்தலூர். அப்பரடிகள் எனும் திருநாவுக்கரசரும் , திருஞானசம்பந்தரும் கயிலாயநாதனை கண்டு வணங்கிய சிவத்தலங்களில் திருக்கூந்தலூரும் ஒன்று.

பண்டை காலத்தில் நாவல் மர வனத்திடையே அமைந்த திருத்தலமாகியதால் ஆலய இறைவன் அருள்மிகு ஜம்புகாரணேசுவரர் என  அழைக்கப்பட்டதாக வரலாறு.மேலும் வனத்தில் நரி  வழிபட்டதாலும்  ஜம்புகாரணேசுவரர் என ஈசன் அழைக்கப்படுவதாக கூறுவதும் உண்டு.

ஆலயத்தின் ஈசான்ய மூலையில் உள்ள தீர்த்தத்தில் சீதா பிராட்டியார் நீராடியபோது கூந்தலில் சில உதிர்ந்ததால் , ஆலயம் அமைந்த சிற்றூர் கூந்தலூர் என அழைக்கப்படுவதாக தல புராணம் கூறுகிறது, மேலும், சீதா தேவியார் நீராடிய தீர்த்தம் அவரது திருநாமம் கொண்டு சீதா தீர்த்தம் என வழங்கப்படுகிறது.

கூந்தலூர் எனும் இந்த பண்டைய சிவத்தலம் , கும்பகோணத்திலிருந்து பூந்தோட்டம் செல்லும் சாலையில் நாச்சியார்கோவிலில் இருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

திருக்கோவிலின் வட கிழக்கில்  சீதா தீர்த்தமும் தென் கிழக்கில் குமார தீர்த்தம் எனும் இரண்டு தீர்த்தங்கள் அமைந்துள்ளன.

மூர்த்தி,தலம் மற்றும் தீர்த்தம் ஒருங்கே அமைந்த சிவாலயம் இதுவாகும்.

திருக்கோவில் நுழைவாயில் இடப்புறம் அருள் தரும் விநாயகர் தனி சன்னதி கொண்டு அருள் பாலிக்கிறார்.

இத்திருக்கோவில் , கூந்தலூர் முருகன் ஆலயம் என உள்ளூர் பக்தர்களால் அழைக்கப்படுகிறது. தமிழ்க்கடவுள்  அருள் தரும் ஆனந்த முருகன் இவ்வாலயத்தில் , நுழைவாயிலின் ஈசான்ய மூலையில் தேவமயிலுடன் தேவியருடன் நின்ற கோலத்தில் அருள்பாலிப்பதும் , ஈசான்யப்பார்வையால் சனீச்வரரை நோக்கி இருப்பது, எங்கும் காணவியலா பெருங்காட்சி! நானிருக்கிறேன், சனி பகவான் இடர் துன்பம் களைகிறேன் என பக்தர்களுக்கு அபயம் அளிப்பது போல இருக்கிறது, முருகப்பெருமானின் திருக்கோலம்!




அன்னை ஆனந்தவல்லி அம்மன் , மூலவர் அருள்மிகு ஜம்புகாரணேசுவரர் சுவாமிக்கு  முன் வலப்புறம் தனி சன்னதி கொண்டு தெற்கு நோக்கி அருளாட்சி புரியும் அற்புதத்தலம்.

மூலவர் அருள்மிகு ஜம்புகாரணேசுவரர் சன்னதியில் சமயக்குரவர் நால்வர் மற்றும் பரிவார மூர்த்திகளுடன் அமைதியே தவழும் கருணை வள்ளலாக அன்பர் யாவருக்கும் இன்னல் களைந்து , மன நிம்மதி  அளித்து அருள் பாலித்து வருகிறார்.

  பிரகாரத்தில்தெட்சிணாமூர்த்தி,லிங்கோத்பவர்,பாலசுப்ரமணியர்  ,மகாலட்சுமி ,  துர்க்கை அம்மன், சண்டிகேஸ்வரர் சன்னதிகள்  பாங்கே அமைந்துள்ளன. 

 மேலும்,1500 ஆண்டுகளுக்கு முந்தைய பல்லவர் கால 16 பட்டை தாரா லிங்கம் , பாலசுப்ரமணியர் சன்னதி அருகே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தாரா லிங்கத்தை வணங்கிவர, 16 வகை செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழலாம்.

ஈசான்ய பாகத்தில் முருகப்பெருமான் , ஈசான்யப்பார்வையால் சனீச்வரரை நோக்குவது , சனி செவ்வாய் கிரகப்பாதிப்புகளால் , அல்லல் பட்டு , என்று நம் துயரம் நீங்கும், யாதொரு உயிர்க்கும் கெடுதல் நினையாது வாழ்ந்தும் கிரகப்பாதிப்புகள் நம்மை கொடுமையாக வாட்டுகின்றனவே, என மனம் கலங்கி  வருந்தி வாழும் அன்பர் இத்திருக்கோவிலில் , ஈசான்யப்பார்வையால் சனி பகவானை சாந்தப்படுத்தும் சத்ரு சம்ஹாரன் அழகன் முருகன் திருவடிகளில் பணிந்து சரணடைந்து, அவரவர் துயரம் விரைவில்  தீரும் எனும் நம்பிக்கையுடன் மன எழுச்சி பெற்று ,  நற்சிந்தனையுடன் முருகனை வணங்கி நிற்பர்.

நாடி வரும் அடியார் துயர் துடைக்கும் தேவ மயிலோன் முருகன் பதம் பணிய ,  துன்பங்கள் நீங்கி நல் வாழ்வு அருள்வார்!

திருக்கோவிலை சுற்றிலும் பல வகை மரங்கள் பாங்குற வளர்க்கப்பட்டு வருகின்றன. மேலும் ஆலய பிரகாரத்தில் நந்த வனம் உள்ளது.


திருக்கோவில் முன் அழகான கட்டுமானத்தில் ஒரு வசந்த மண்டபம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. திருக்கோவிலை சுற்றிலும பசுமையான தோட்டங்கள் , திருக்கோவில் உள்ளே இறைவனின் அருளாசி,ஆலய வெளியே இயற்கை அன்னையின் அற்புதக்காட்சி,அடியார் யாவரும் மன நிறைவுடன் திருக்கோவில் தரிசனம் செய்து  , மிக மன நிறைவுடன் இயற்கையை தரிசித்து வர ஒரு அருமையான தலம் தான் கூந்தலூர் முருகன் திருக்கோவில் என அழைக்கப்படும் அருள்மிகு ஜம்புகாரணேசுவரர் திருக்கோவில்.


1600 ஆண்டுகால பழமைமிக்க இந்த திருக்கோவில் கல்வெட்டுகளை , ஆராய்ந்து , தொல்லியல் ஆய்வாளர் திரு.குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் அளித்த ஆய்வுக்குறிப்புகளைப் படித்தறிய கீழே உள்ள தலைப்பை, க்ளிக் செய்யவும்.